இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்று  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது  புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால் புயல் உருவான நிலையில் இது இந்த வருடம் உருவாகும் இரண்டாவது பெரிய புயலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என்ற பெயர் வைக்கப்படும்.  இது நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். மேலும் நாளை முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.