ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில், காதலைத் தெரிவித்த இளைஞர் ஒருவர், பெண்ணின் தந்தையாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருஷோத்தம்பூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சுதார் என்ற இளைஞர், பீர்பிரம்மபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுபாஷ் தனது காதலை அந்தப் பெண்ணிற்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் தந்தை பகவான் கர் என்பவருக்கு தெரியவர, அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

தன்னுடைய மகளிடம் காதலைத் தெரிவித்த சுபாஷைப் பழிவாங்கத் துடித்த பகவான் கர், தந்திரமாக அவரை ஒரு வாகனத்தில் ஏற்றி பீர்பிரம்மபூர் கிராமத்திற்கு கடத்திச் சென்றார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் தூணில் சுபாஷை கட்டி வைத்து, சரமாரியாகத் தாக்கியுள்ளார். எந்தவித மனிதாபிமானமுமின்றி, ஒரு தந்தையே  அந்த இளைஞரைச் சித்திரவதை செய்துள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த சுபாஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுபாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் தேவராஜ் ஜேனா கூறுகையில், உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது ஒருவரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.