தமிழ்நாட்டில் “முத்திரை பதிக்கும் திட்டங்கள்” தொடர்பாக தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் வேறு எந்த அமைச்சர்களும் உடன் இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் வே. இறையன்பு மற்றும் அரசு செயலாளர்களும் அரசு அலுவலர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை, சுற்றுலா வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாடு சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை பள்ளிக்கல்வி, கால்நடை, பால் உற்பத்தி மற்றும் மின் வளம், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு பொதுத்துறை மற்றும் மறுவாழ்வு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வருவாய் ஆகிய 12 துறைகளை சார்ந்த நடைமுறையில் உள்ள 51 திட்டங்கள் பற்றியும் 19 எதிர்கால திட்டங்கள் பற்றியும் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது துறை செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் பற்றி விளக்க படங்கள் வாயிலாக எடுத்துரைத்தனர். இந்நிலையில் முதல்வரின் சிறப்பு திட்ட அமலாக்க ஆலோசனை அடுத்த சில காலங்களுக்கு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய டாஸ்காக பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அருகே உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அலசிய போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் மாதத்தில் சிகிச்சைக்காக லண்டன் செல்ல இருக்கிறார். அதனால் எப்போது வேண்டுமானாலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.