கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். எனவே கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு ஹரிஹரன் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் அளவுமானி கணக்கீட்டாளராக வேலை பார்க்கும் நடராஜ் என்பவரிடம் விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நடராஜ் கூறியபடி கட்டிட வரைபடம் அனுமதிக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதிக்கான கட்டணத்தை ஹரிஹரன் ஆன்லைனில் செலுத்தி அந்த ரசீதை காண்பித்தார்.

இந்நிலையில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 10, 450 ரூபாயை செலுத்திவிட்டு தனக்கு தனியாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வாங்கி தரப்படும் என நடராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து ஹரிஹரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை ஹரிஹரன் நடராஜனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடராஜை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.