
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார்.
2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையும், இந்திய அணியும் இன்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்திய அணியில் இன்று அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் சுந்தர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். மேலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் இப்போட்டியில் சேர்க்கப்பட்டனர். மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்தது.
அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குஷால் பெரேரா இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் குஷால் பெரேரா (0) கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதைத்தொடர்ந்து முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 4வது ஓவரின் முதல் பந்தில் பதும் நிசாங்கா(2) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின் 3வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் சமரவிக்ரம மற்றும் 4வது பந்தில் அசலங்கா இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அடுத்தடுத்து இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்திலும் தனஞ்செய டி சில்வா 4 ரன்னில் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 4 ஓவரில் 12 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாறியது. சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். பின் சிராஜ் மீண்டும் 6வது ஓவரில் இலங்கை கேப்டன் ஷன்காவை (0) போல்ட் ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். தொடர்ந்து குஷால் மெண்டிஸ் 17 ரன்னில் சிராஜிடம் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வெல்லலாகே (8), மதுஷன் (1), பத்திரனாவை (0) ஹர்திக் பாண்டியா வெளியேற்ற இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 7 ஓவரில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சிராஜ் என்ற பெருமையை பெற்றார். அதாவது, முதல் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். மேலும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களும், பும்ரா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
1999 ஆம் ஆண்டு கோகோ-கோலோ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை 54 ரன்னுக்கு இலங்கை ஆல்-அவுட் செய்தது. தற்போது 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை 50 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை பழிவாங்கியுள்ளது இந்திய அணி.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்து போட்டியை முடித்து வைத்தனர். இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சுப்மன் கில் 27 ரன்களுடனும், இஷான் கிஷன் 23 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி.
இந்நிலையில் வெற்றிக்கு பின் ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதையும், பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார். அதாவது விருதுக்கான பரிசுத் தொகை அமெரிக்க 5,000 டாலரை (இந்திய மதிப்பு ரூ 4,15,451.75) கண்டி, கொழும்பு மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். “அவர்கள் நிறைய கிரெடிட்டுக்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.”இந்த ரொக்கப் பரிசு மைதான வீரர்களுக்குச் செல்கிறது. அவர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடந்திருக்காது” அவர்களின் பணி இல்லாமல் போட்டி முன்னேறியிருக்காது” என்று போட்டிக்கு பின் சிராஜ் கூறினார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் உள்ள மைதான ஊழியர்கள் போட்டிகள் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுவதை உறுதிசெய்ய 24 மணி நேரமும் உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Mohammad Siraj dedicates his Player Of The Match award and cash prize to the Sri Lankan groundstaff.
– What a beautiful gesture by Siraj! pic.twitter.com/Nt27PEgSk5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023