ஆசிய கோப்பை 2023 இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக ஒரு பெரிய போட்டியிலும் வெற்றி பெறாத வறட்சியை இந்தியா ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஓப்பனிங் செய்ய வந்த ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்தியாவுக்காக 6.1 ஓவர்களில்போட்டியை முடித்தனர். 51 ரன்கள் என்ற குறைந்த சவாலை இலங்கை அணி இந்தியாவுக்கு அளித்தது. இந்தியாவைச் சேர்ந்த இஷான் கிஷான் (23), ஷுப்மான் கில்(27) ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்து அணியை வெற்றிபெற வைத்தனர். ரோஹித் சர்மா ஓப்பன் செய்யாமல், இஷான் மற்றும் கில் ஜோடியை அனுப்பினார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்தியா வலுவான பிடியில் இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் இலங்கை டாஸ் மட்டுமே வென்றது. முதலில் பேட்டிங் ஆடியது இலங்கை அணி. ஆனால் இந்திய வீரர்கள் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. இலங்கை டாஸ் வென்று இந்தியாவை பந்துவீச அழைத்தது, ஒட்டுமொத்த இலங்கை அணியும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறியது. ஜஸ்பிரித் பும்ரா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தார், அதன்பின் நான்காவது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சிராஜ் இலங்கையின் முதுகெலும்பையே உடைத்தார். அதன்பின் மெண்டிஸ் மற்றும் ஷனகா ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றி இலங்கையின் பெரிய ஸ்கோரின் கனவை தகர்த்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 7 ஓவரில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சிராஜ் என்ற பெருமையை பெற்றார். அதாவது, முதல் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். மேலும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களும், பும்ரா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி.