இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலை ஜனநாயக சீரமைப்புக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் சந்திரபாபு நாயுடுவும், மிகவும் எளிமையான முதல்வர் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இருக்கிறார். ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 931 கோடியாக இருக்கும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தாபானர்ஜியின் சொத்து மதிப்பு வெறும் 15 லட்சம் ரூபாய் தான். இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது 52.59 கோடியாக இருக்கிறது. அதன் பிறகு 2023-24 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 854 ரூபாயாக இருக்கிறது எனவும் முதலமைச்சர்களின் சராசரி வருமானம் 13 லட்சத்து 64 ஆயிரத்து 310 ரூபாயாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மொத்தம் 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு 1230 கோடியாக இருக்கும் நிலையில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் பீமா கண்டு சொத்து மதிப்பு 332 கோடியாகவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் சொத்து மதிப்பு 51 கோடியாகவும், கேரள முதல்வர் பினராய் விஜயன் சொத்து மதிப்பு 118 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா சொத்து மதிப்பு 55 லட்சம் ரூபாய் ஆகும். டெல்லி முதல்வராக இருக்கும் அதிஷி மற்றும் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோர்தான் மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர்கள். மேலும் சந்திர பாபு நாயுடு மற்றும் சித்தராமையாவுக்கு முறையே 33 கோடி மற்றும் 23 கோடி கடன் இருக்கிறது. இதேபோன்று இமாச்சல் பிரதேச முதல்வருக்கு 180 கோடி கடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.