அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் ஆர்எஸ்எஸ் மைனிங் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தேர்தல் பணிக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அந்த நிறுவனம் 7 கோடி ரூபாயை வழங்கியது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த வருடம் ஜூன் மாதம் எஸ்பி வேலுமணிக்கு வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு எஸ்பி வேலுமணி விளக்கம் அளித்த நிலையில் வருமானவரித்துறையினர் எஸ்பி வேலுமணியின் மொத்த சொத்து மதிப்பு 7 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 770 ரூபாய் என நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரி தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது எஸ்பி வேலுமணி வருமானவரித்துறையினர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவில்லை எனவும், நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும், நான் அளித்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் எஸ்பி வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருமானவரித்துறையினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.