உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின் தாக்குர்கஞ்ச் பகுதியில், வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த நிலையில், பிரியா தீட்சித் என்ற அரசு வேலைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் தற்கொலை செய்த சம்பவம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வருகிற ஜூன் 10ஆம் தேதி அரசு பணியில் சேர்ந்திருக்க வேண்டிய பிரியா, அதற்கு முன்பே தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். மரணத்திற்கு முன் அவர் எழுதிய இரு பக்க தற்கொலைக் குறிப்பில், தனது மாமியாரின் தொந்தரவுகள் மற்றும் மாமனார், கணவர் ஆகியோரின் செயல்கள் பற்றி விரிவாக எழுதி இருந்தது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, பிரியா கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சுபம் டாண்டன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆரம்பத்தில் சிறிது நாட்கள் நன்றாக இருந்தாலும், பின்னர் மாமியார், மாமனார் மற்றும் மைத்துனர்கள் வரதட்சணை குறைவாகக் கொண்டுவந்ததாக குற்றம்சாட்டி அவரை தொடர்ந்து கேலி செய்து வந்தனர். அந்த பெண்ணிடம் ₹6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் எஸ்யூவி கார் வாங்கி வரவேண்டும் என தொடர்ந்து அவர்கள்அழுத்தம் கொடுத்ததாகவும், பிரியாவை வீட்டு வாசலிலேயே 6 மணி நேரம் நிறுத்தி வைத்த நிலையில் போலீசார் தலையிட்டதால்தான் பின்னர் அந்த பெண்ணை வீட்டிற்குள் செல்ல அனுமதித்தனர். கடந்த மே 13ஆம் தேதி அவர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரும், மிரட்டல்கள் நீடித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக் குறிப்பில், பிப்ரவரி 1ஆம் தேதி மாமியார், மாமனார் மற்றும் கணவர் ஆகியோர் தலையணையால் மூச்சுத் திணறச் செய்து கொல்ல முயன்றதாகவும், தன்னுடைய பெற்றோருக்காக பாதுகாப்பும் நீதியும் வேண்டும் என்பதற்காக தன்னை தானே அழித்துக் கொள்கிறேன் எனவும் எழுதியிருந்தார்.

தற்போது, சுபம் டாண்டன், கீதா டாண்டன், கிர்தர் நாராயண் டாண்டன் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், பிரியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.