தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மீண்டும் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு சுமார் 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் புகாரை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை மாநில செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார் கொடுத்துள்ளார்.
கடந்த 2021 முதல் 23 வரை 45 ஆயிரம் மின் மாற்றிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி 1182 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும்போதுதான் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதில் விதிமுறைகளை பின்பற்றாமல் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் விடுக்கப்பட்டது தான் இழப்புக்கு காரணம் என்று அதிமுக நிர்மல் குமார் தன் புகாரில் தெரிவித்துள்ளார். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் வெளியே வந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது திமுக வட்டாரங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
