தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி துறையில் ரூ.1,020 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை (ED) தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத் துறை அனுப்பிய அந்தக் கடிதத்தில், அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டட நிர்மாணப் பணிகள், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங் பணிகள், NABARD (தேசிய வேளாண்மை மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு திட்டங்கள், நீர் மற்றும் குளம் தொடர்பான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்கூட்டியே யாருக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, ஒவ்வொரு டெண்டரிலும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் மொத்தமாக ரூ.1,020 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.-க்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ள தகவலை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதன் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
