கொல்கத்தா அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் சிக்ஸரை அடித்த பிறகு ஷாருக் கான் கைதட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

2024 ஐபிஎல்லின் 16 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று  விசாகப்பட்டினத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து சிக்ஸர் மழையை பொழிய செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய பில் சால்ட் 18 ரன்களும், சுனில் நரேன் அதிரடியாக 39 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 85 ரன்களும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களும், அதிரடியாக ரிங்கு சிங் 8 பந்துகளில் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ்) 26 ரன்களும் குவித்தனர். அதன்பின் ஆண்ட்ரே ரசல் அவர் பங்குக்கு அதிரடியாக 19 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸ் உட்பட 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப்பண்ட்  25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 55 ரன்களும்,  ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்த போதிலும் கார் விபத்திலிருந்து மீண்டு வந்த அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிக்சர், பவுண்டரி என விளாசி ரசிகர்களை  மகிழ்வித்தார். போட்டியின் போது வெங்கடேஷ் ஐயர் வீசிய 12வது ஓவரில் சிக்சர், பவுண்டரிகளாக தொடர்ந்து விளாசினார். அந்த ஓவரில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி என மொத்தம் 28 ரன்களை விளாசினார். அதில் ரிஷப் பண்ட் லெக் திசையில் நோ லுக் சிக்ஸரை பறக்க விட்டார். இதனை கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் எழுந்து நின்று கைதட்டினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே போட்டிக்கு பின் ஷாருக் கான் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் உள்ளிட்ட டெல்லி வீரர்களை சந்தித்து கட்டிப்பிடித்து அன்புடன் பேசியது குறிப்பிடத்தக்கது.