இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நபராக மாற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞன் ரயில் தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்று கொண்டு மொபைலில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது.
மேலும் பின்னால் அதிவேகமாக வரும் ரயிலைக் கவனித்தும் விலகாமல், அலட்சியமாக கேமராவைப் பார்த்து நடந்து சென்ற அந்த இளைஞன் மீது ரயிலின் பக்கவாட்டுப் பகுதி பலமாக மோதியது. இந்த கோரமான மோதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த இளைஞன், நூலிழையில் உயிர் தப்பினார்.
சமூக வலைதளங்களில் சில வினாடிகள் கிடைக்கும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது வாழ்க்கையையே ஒரு நொடியில் தொலைக்கத் துணிந்த அந்த இளைஞனின் செயல் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்பது மட்டுமின்றி, அது மிகப்பெரிய உயிராபத்தை விளைவிக்கும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
இதனால் எத்தனையோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், கவனக்குறைவாகச் செயல்படும் இளைஞர்களுக்கு இந்த வீடியோ ஒரு பாடமாக அமைந்துள்ளது. வெறும் புகழுக்காகத் தனது உயிரை விட மேலான ஒன்றும் இவ்வுலகில் இல்லை என்பதை உணர்ந்து, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
