இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட்டுகள், திடீரென பயணம் செய்யும் பொதுமக்கள் நம்பும் முக்கியமான வாய்ப்பாக இருக்கிறது. ஆனால் தற்போது, இந்தத் தட்கல் டிக்கெட்டுகள் ஏஜெண்டுகள் கட்டுப்பாட்டில் சிக்கி, சாதாரண பயணிகள் ஏமாறும் நிலை உருவாகியுள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுக்கு IRCTC தளம் மட்டுமே வழி. ஆனால் பாட்டுகள் எனப்படும் தவறான மென்பொருட்கள், சில நொடிகளில் தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்து விடுகின்றன. இதனால், உண்மையான பயணிகள் கன்பார்ம்  டிக்கெட்டுகள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த துறை பக்கவாதம் அடைந்துள்ளதோ என்று மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா டுடே வெளியிட்ட அறிக்கையின்படி, டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் 40க்கும் மேற்பட்ட குழுக்கள், தட்கல் டிக்கெட் புக்கிங் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆதார் சரிபார்க்கப்பட்ட IRCTC ஐடிக்கள் வெறும் ரூ.360க்கு, பாட்டுகள் ரூ.999 முதல் ரூ.5000 வரை விற்கப்படுகின்றன. பாட்டுகள் நொடிகளில் பயணிகள் விவரங்கள், ரயில் எண், கட்டணம் உள்ளிட்டவை தானாகவே நிரப்பி, ஒரு நிமிடத்திற்குள் டிக்கெட்டை உறுதி செய்கின்றன. இதனாலேயே அரசு தற்போது புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.

ஜூலை 1 முதல் அமலில் இருக்கும் புதிய ரயில்வே விதிகள் என்ன?

🔹 ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்:
2025 ஜூலை 1 முதல், IRCTC தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு, பயனரின் IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

🔹 OTP சரிபார்ப்பு:
2025 ஜூலை 15 முதல், ஆன்லைன் மற்றும் கவுண்டர் வழியாக தட்கல் முன்பதிவிற்கு, ஆதார் OTP சரிபார்ப்பு கட்டாயம்.

🔹 ஏஜெண்டுகள் மீது கட்டுப்பாடு:
தட்கல் முன்பதிவின் முதல் 30 நிமிடங்களில் (AC டிக்கெட் – காலை 10:00 முதல் 10:30 / Non-AC – 11:00 முதல் 11:30 வரை), அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் டிக்கெட் புக் செய்ய முடியாது.

பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை:
இந்த  செயலிகள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் வகையிலும் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே அமைச்சகம் இதுவரை 2.5 கோடி போலி ஐடிகளை முடக்கியது என்றும், தட்கல் டிக்கெட் ஆரம்பம் ஆன முதல் 5 நிமிடங்களில் 50% உள்நுழைவு முயற்சிகள் பாட்டுகள் மூலம் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், வலைதளத்தில் விற்கப்படும் போலி மென்பொருட்களையும் ஐடிகளையும் நம்ப வேண்டாம். அரசு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்போது மட்டுமே, தட்கல் டிக்கெட்டுகள் எளிமையாகவும் நியாயமான முறையிலும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது!