ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஈரான் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் விடுத்துள்ள ஒரு அதிரடி எச்சரிக்கை அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய நேரப்படி இன்று இரவு 9 மணி வரை (இந்திய நேரப்படி இரவு 11 மணி) பொதுமக்கள் யாரும் ரயில்களைப் பயன்படுத்தவோ அல்லது ரயில் தண்டவாளங்களுக்கு அருகிலோ செல்ல வேண்டாம் என இஸ்ரேல் ராணுவம் மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த காலக்கெடுவிற்குள் ரயில்வே கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், “உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என நேரடியாகவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் ஈரான் நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும், இஸ்ரேலின் இந்த ‘டைரக்ட் வார்னிங்’ சாதாரண மக்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் ஈரானின் போக்குவரத்துத் துறையை முடக்கும் வகையில் ஏதேனும் பெரிய தாக்குதல்கள் நடக்குமா அல்லது இது ஒரு உளவியல் ரீதியான தாக்குதலா என்ற விவாதங்கள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இன்று இரவு ஈரானில் என்ன நடக்கப்போகிறது என்பதை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.
