நெல்லை NEET பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த சித்திரவதை சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையம் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருவதாகவும், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சி மையத்தின் உரிமையாளர் மாணவர்களை பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தியதோடு, சில நேரங்களில் சிறிய தவறுகளுக்காக கூட மாணவர்களை அடித்து சித்திரவதை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமிலாமல் காலணியை முறையாக கழற்றாமல் சென்றதாக கூறி, மாணவி ஒருவரின் மீது காலணியை வீசிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதன் பின்னர், மையத்தின் உரிமையாளர் உட்பட 3  பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.