கர்நாடகாவில் தற்போது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர கன்னட மாவட்டத்தில் பசு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் கூட கர்ப்பிணி பசுவின் தலையை துண்டித்து மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இப்படியான நிலையில் உத்தர கன்னட மாவட்ட அமைச்சர் மங்களா சுப்ப வைத்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாம் தினம்தோறும் பசுவின் பாலை தான் குடித்து வருகின்றோம். நம்மை பாசத்துடனும் அன்புடனும் பார்க்கக்கூடிய விலங்கு தான் பசு.

தொடர்ந்து பசு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி திருடுபவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என நான் போலீசிடம் கூறினேன். தேவைப்பட்டால் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை சாலையில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள் என்றும் நான் போலீசாரிடம் கூறியுள்ளேன். பாஜகவின் முந்தைய ஆட்சியின் போது பசுக்கள் திருடப்பட்டதாக புகார் வந்தாலும் பசு வளர்ப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பசுக்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்கள் இருவருமே பாதுகாக்கப்பட்டனர் என கூறியுள்ளார்.