
யார் அந்த சார் குறித்த ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி இன்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதேவேளையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று ஒருவரிடம் பேசி இருப்பதாகவும் “அந்த சார் யார் “என்பது குறித்து உயர் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து “யார் அந்த சார்” என்பது குறித்த ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அதை தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “அண்ணாமலைக்கு கிடைக்க கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் வெளியிட்டார் என்றால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தலை குனிவு. ஒரு சிபிஐ விசாரணை போடக்கூடிய அளவிற்கு ஒரு கிரிமினல் சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அது தொடர்பாக ஒரு எதிர்க்கட்சியை சார்ந்த ஒரு மாநில தலைவர் இந்த விஷயத்தை வெளியிட்டார் என்றால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம் இது” என்று தெரிவித்துள்ளார்.