ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடுமையான விமர்சனங்களையும் சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவரது முன்னாள் அணியான குஜராத் டைட்டன்ஸ் தனது புதிய நட்சத்திர வீரரை வெகுவாகப் பாராட்டி வருகிறது. ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக அணியில் இணைந்துள்ள ஜேசன் ஹோல்டரை “உலகத்தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்” என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி புகழ்ந்துள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ஹோல்டர், இக்கட்டான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும், அவர் ஒரு அனுபவம் வாய்ந்த வீரராக அணியை வலுப்படுத்துவதாகவும் சோலங்கி குறிப்பிட்டார்.

இதனால் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹோல்டர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் திவேத்தியாவுடன் இணைந்து அவர் ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப் மற்றும் அவரது துல்லியமான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு ஒரு தகுதியான மாற்றைக் கண்டறிந்துள்ளதாகவும், ஹோல்டரின் வருகை அணிக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்துள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் நீடிக்கிறது.