“என்னை சிவபெருமான் அழைக்கிறார், நான் செல்கிறேன்” என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, 19 வயது இளம் பெண் மாயமான சம்பவம் மேடுபள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லம்கொண்ட சைலஜா என்பவரது மகள் மது ஹசிதா (19). பிளஸ்-2 படிப்பை முடித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மது ஹசிதா திடீரென மாயமானார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் சைலஜா, மகளைக் காணாமல் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.
வீட்டில் தேடியபோது மது ஹசிதா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: “நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சிவபெருமான் என்னை அழைக்கிறார், அதனால் நான் அவரிடம் சென்று கொண்டிருக்கிறேன்.” இந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக மேடுபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவி முன்பு வசித்த லாலா பேட்டை பகுதியில் ஒரு வாலிபருடன் பழகி வந்ததும், குடும்பத்தினர் கண்டித்ததால் கடந்த 10 மாதங்களாக அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மது ஹசிதா, கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானத்தில் இருப்பது போலவே இருந்து வந்துள்ளார். இந்த விரக்தியின் காரணமாகவே அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சிவபெருமான் அழைக்கிறார் எனக் கூறி மாயமான மாணவியைத் தேட, போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
