தில்லியில் நிகழ்ந்த ஸ்ரத்தா வாக்கர் கொலைச் சம்பவத்தைப் போன்றே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படை தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் தனது காதலியைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரா (35) என்பவர் விசாகப்பட்டினத்தில் கடற்படை தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மோனிகா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பழக்கம் இருந்து வந்துள்ளது. ரவீந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்ற போதிலும், மோனிகாவுடன் ரகசியத் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ரவீந்திரா தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மோனிகா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இல்லையெனில் அவர்களது உறவு குறித்து ரவீந்திராவின் மனைவியிடம் கூறிவிடுவேன் என்றும் மோனிகா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ரவீந்திராவின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், கடந்த வாரம் பிரசவத்திற்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் ரவீந்திரா தனியாக இருப்பதை அறிந்த மோனிகா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) மதியம் ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரவீந்திரா, மோனிகாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைப்பதற்காக மோனிகாவின் உடலைச் சிறிய துண்டுகளாக வெட்டியுள்ளார்.

உடலின் சில பாகங்களை ஒரு பையில் அடைத்துச் சென்று தாராபாலம் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ரவீந்திரா எரித்துள்ளார். மீதமுள்ள உடல் பாகங்களை அழுகாமல் இருப்பதற்காகத் தனது வீட்டில் உள்ள பிரிட்ஜில் அடுக்கி வைத்துள்ளார்.

உடலின் ஒவ்வொரு பாகமாக அப்புறப்படுத்தத் திட்டமிட்டிருந்த ரவீந்திரா, திடீரென மனசாட்சி உறுத்தியதால் அல்லது பயத்தின் காரணமாகக் காஜுவாகா காவல் நிலையத்தில் ஆஜராகி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.

ரவீந்திரா அளித்த தகவலின் பேரில் அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார், பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களைக் கைப்பற்றினர். இருப்பினும், மோனிகாவின் தலை இன்னும் மீட்கப்படவில்லை. அதனை ரவீந்திரா வேறு எங்கோ வீசியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தலை மற்றும் எரிக்கப்பட்ட மீதமுள்ள உடல் பாகங்களைக் கண்டறியத்  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.