ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யானை ஒன்றிற்குப் பிரகாசமான இளஞ்சிவப்பு வண்ணம் பூசி புகைப்படம் எடுத்த வெளிநாட்டுப் பெண் கலைஞரின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் கிளப்பியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயணப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா, அண்மையில் இந்தியா வந்திருந்தார். ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அவர், அந்த நகரத்தின் பாரம்பரிய இளஞ்சிவப்பு (Pink City) நிறத்தால் கவரப்பட்டு, ஒரு வினோதமான புகைப்படப் படப்பிடிப்பை நடத்தினார்.
அதில், ஒரு பெரிய யானை உடல் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, மாடல் அழகி யஷஸ்வியுடன் ஒரு பாரம்பரிய நுழைவாயில் முன்பாக நிற்க வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே வைரலானது. ஒரு தரப்பினர் இதன் கலைத்திறனைப் பாராட்டினாலும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
जयपुर में एक विदेशी फोटोग्राफर के फोटोशूट को लेकर विवाद खड़ा हो गया है, जिसमें हाथी को चमकीले गुलाबी रंग से रंगकर तस्वीरें ली गईं. ट्रैवलिंग आर्ट फोटोग्राफर जूलिया बुरुलेवा द्वारा सोशल मीडिया पर तस्वीरें साझा किए जाने के बाद लोगों ने वन्यजीवों के इस्तेमाल और सुरक्षा को लेकर… pic.twitter.com/vJgbkHOjmu
— NDTV India (@ndtvindia) March 30, 2026
யானையின் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது என்றும், ரசாயன வண்ணங்களைப் பூசுவது அந்த விலங்குக்குத் தேவையற்ற துன்பத்தைத் தரும் என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “வனவிலங்குகளை வெறும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்துவது அப்பட்டமான சுரண்டல். கலை என்ற பெயரில் விலங்குகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது,” என சமூக வலைதளப் பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சர்ச்சை குறித்து ஜூலியா புருலேவா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ராஜஸ்தானின் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையில் யானைகள் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளன. ஜெய்ப்பூரின் இளஞ்சிவப்பு நிறம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், அந்த நகரத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை மேற்கொண்டேன். இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது என்றார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் வனத்துறை அதிகாரிகள் இதில் தலையிட்டுள்ளனர். யானைக்கு வண்ணம் பூச முறையான அனுமதி பெறப்பட்டதா? பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் விலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
