தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியில் முக்கிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கோவை, ஈரோடு மற்றும் அரியலூரில் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை, தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பூத் கமிட்டிக்கு 5 முதல் 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் புதிதாக ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஒரே நிர்வாகியை நியமிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னதாக விஜய் தலைமையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தின் போது ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விஜய் நேர்காணல் நடத்தி மொத்தம் உள்ள 138 மாவட்டங்களுக்கு 120 மாவட்ட செயலாளர்களை நியமித்து அவர்களுக்கு வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.