ஜெய்ப்பூரில் உள்ள ‘சந்தன் வன்’ திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், யாரும் எதிர்பார்க்காத ஒரு சினிமாத்தனமான திருட்டு நடந்துள்ளது. மணமக்களுடன் மேடையில் உறவினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கோட் சூட் அணிந்து செம கெத்தாக ஒரு இளைஞர் மேடைக்கு வந்துள்ளார். பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர் போல இருந்த அந்த நபர், மணமகள் அருகில் இருந்த பேக்கை நைசாகத் தூக்கி, தனது பிளேஸர் (Blazer) சட்டையினுள் மறைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்தப் பையில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

​திருமண வேலைகள் முடிந்து பார்த்தபோதுதான் மணமகளின் பேக் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த ‘சூட்-பூட்’ ஆசாமி கைவரிசை காட்டியது தெரியவந்தது. மணமக்கள் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தத் திருடன் அசால்ட்டாகப் பேக்கைத் தூக்கியுள்ளான். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி, “கல்யாண விசேஷங்களுக்குப் போகும்போது உங்க பொருளைப் பத்திரமாப் பார்த்துக்கோங்கப்பா” என எச்சரிக்கை விடுத்து வருகிறது.