நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் தேர்தல் வெற்றிக்காக கூட்டணி அமைத்தது யார்? திராவிட ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை? இந்தியாவின் தனிச்சிறப்பு பல்வேறு மொழி பேசக்கூடிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக உள்ளார்கள் என்பதுதான். அதனை அடியோடு சிதைக்கத்தான் பாஜக முயற்சித்து வருகிறது. நாட்டை துண்டாட நினைக்கின்றார்கள் என்று சீமான் பேசிக் கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

கட்சிக்காக நான், கட்சியில் நான் என்ற கோட்பாடுடன் இருப்பவர்களே நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து பயணிக்க முடியும். வளர்ச்சிக்காக வேறொரு நபர்கள் வரும்போது சிக்கல் வருகின்றது. சீமானுக்கு பிறகு கட்சி யாருக்கு என்பதே அவர்களுடைய போட்டி. கட்சியில் என்னை வளர விடவில்லை என்று கூறுகிறார்கள். கட்சி வளர்ந்தால் மட்டும் தான் அவர்களால் வளர முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து திருச்சி டிஐஜி வருண்குமார் சமீபத்தில் சீமான் ஒரு மைக் புலிகேசி, தேவையில்லாம என்னோட பர்சனல் லைஃப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார் என பேசி இருந்தார். இது தொடர்பாக சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஐபிஎஸ் வருண் குமார் கட்சிக்காரன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் தனி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கின்றார். இத்தனை போலீஸ்காரர்கள் இருக்கும்போது அவர் மட்டும் இப்படி ஏன் பேசுகிறார் என அவரிடம் தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்? ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் அவரை தூண்டி விடுகிறார்கள், அதன்படி அவரும் ஆடிக் கொண்டிருக்கின்றார். சும்மா தேவையில்லாமல் என்னை சீண்டினால் வெறி வருமா இல்லையா? அவரின் வேலையே செல்போனை திருடுவது தான். எங்களுடைய கட்சிக்காரர்களை தேவையில்லாத குற்றங்களுக்கு கைது செய்து உடனே அவர்களுடைய செல்போனை பிடுங்கி அதில் இருக்கக்கூடிய குரல் பதிவுகளை திருடுவது தான் அவருடைய வேலை. கட்சிக்காரரை போல் செயல்படும் வருண் குமார் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் பேசியுள்ளார்.