கலகாரிப் பாலைவனத்தின் அடியில், சுமார் 800 அடி ஆழத்தில் ‘டிராகன்ஸ் பிரீத்’ என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலே வறண்ட மணல் பரப்பாகக் காணப்படும் இப்பகுதியின் கீழே, மில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் பாறைகள் நீரில் கரைந்து இந்த பிரம்மாண்டமான குகை உலகம் உருவாகியுள்ளது.
மேலும் 1986 இல் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த இருண்ட உலகத்தை, மனிதர்களால் முழுமையாக ஆராய முடியாததால், ‘சன்பிஷ்’ என்ற அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் அதன் ஆழத்தையும் அமைப்பையும் விஞ்ஞானிகள் துல்லியமாக வரைபடமாக்கியுள்ளனர்.
இதனால் முழுக்க முழுக்க சூரிய ஒளி இல்லாத, கடுமையான அழுத்தத்தைக் கொண்ட இந்த இருண்ட நிலத்தடி உலகிலும் சில விசித்திரமான உயிரினங்கள் உயிர்வாழ்வது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒளியே இல்லாததால் காலப்போக்கில் தங்களின் பார்வைத்திறனை முழுமையாக இழந்த ‘தங்க நிறக் குருட்டு கெளுத்தி மீன்கள்’ மற்றும் நிறமியோ, கண்களோ இல்லாத ‘வெள்ளை இறால்கள்’ போன்ற அரிய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.
இந்நிலையில் இவை சூரிய ஒளியைச் சார்ந்து இருக்காமல், தண்ணீரில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்தும், அங்குள்ள வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியும் தங்களின் உணவைத் தேடி இந்த ஆபத்தான சூழலில் பல மில்லியன் ஆண்டுகளாகத் தகவமைத்துக் கொண்டு உயிர்வாழ்கின்றன.
