
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர் தலையீடு அதிகம் இருந்ததாக திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்ததாகவும் அதன் பேரில் சென்னைக்கு திமுக தலைமையால் வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக மேலிடத்தால் கண்டிக்கப்பட்டு கோவை திரும்பியதும் கல்பனா ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது. நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவுக்கு திமுக கவுன்சிலர்கள் இடையே ஆதரவு இல்லாததும் கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் போதிய செல்வாக்கு இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகுவதாக சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
கவுன்சிலர்கள் எதிர்ப்பு உள்ளிட்டவை அவர்களின் ராஜினாமாவுக்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜினாமா இத்துடன் நிற்காது, தொடர கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதே காரணத்துக்காக சென்னை மாநகராட்சி அருகே உள்ள மாநகராட்சி பெண் மேயரும் விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படுகிறது.