
வாலாஜாபாத் அருகே தங்கை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி பானுமதி (55) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூர்த்தி மாநகர போக்குவரத்து ஓட்டுனராக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். அவரின் மூத்த மகனின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவிருந்த நிலையில், தம்பதியினர் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பைக்கில் சென்றிருந்தனர். மதுராநல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றனர்.
இந்த நிலையில் வாலாஜாபாத் – ஒரகடம் சாலையில் பயணித்தபோது, எதிர்திசையில் வந்த கார், மூர்த்தி ஓட்டிய பைக்கில் மோதியது. இந்த விபத்தில் தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த துயரமான விபத்து சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.