மதுரை அருகே உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (வயது 33).

நேற்று அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் கழிவறைக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜராஜேசுவரன், அந்தப் பெண் இயற்கை உபாதை கழித்ததை ஜன்னல் வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். பின்னர் அந்த சம்பவத்தை சக பெண் ஊழியர்களிடம் கூறியதிலிருந்து இந்த வன்முறைச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது .

பின்னர், சம்பவம் தொடர்பாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் உடனடியாக ராஜராஜேசுவரனிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து பரிசோதித்தபோது, அதில் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு பெண் ஊழியர்கள் கழிவறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் போது அவர்கள் மேல் ஆபாசமாக படம் பிடிக்கப்பட்ட பல வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. . இதன் அடிப்படையில்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும்  சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செயற்பொறியாளர் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி ராஜராஜேசுவரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.