ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூகத்தில் வெறுப்பும் அழுத்தமும் இல்லாமல் அமைதியையே விரும்புவதாகக் கூறியதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் (NCW) இந்த தாக்குதல்களை கண்டித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் தனது  வாழ்நாள் துணைவனை இழந்த ஹிமான்ஷி, “வினய்க்காக  பிரார்த்திக்க வேண்டும், அவர் எங்கு இருக்கிறாரோ, அமைதியாக இருக்கட்டும். மேலும் ஒரே வேண்டுகோள், யாரையும், குறிப்பாக முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளை வெறுக்க வேண்டாம். அமைதி வேண்டும். வெறுப்பே வேண்டாம்” என உணர்ச்சிவசப்பட்டு கூறியிருந்தார்.

இந்த கருத்திற்குப் பின்னர் சமூக ஊடகங்களில் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதை கடுமையாக கண்டித்த தேசிய மகளிர் ஆணையம், “லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்த பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் கூறிய கருத்துகளுக்காக அவர்மீது சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிகவும் கேவலமானது மற்றும் வருத்தமளிக்கக் கூடியதும் ஆகும்” எனத் தெரிவித்தது.

“ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையையோ, அல்லது அவருடைய யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை விமர்சிக்கக்கூடாது. சுதந்திரமான கருத்தை தெரிவித்தாலும், அது மரியாதைக்குரிய முறையிலும், அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்” என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தையும், வினய் நர்வால் மதம் கேட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, “இந்த தாக்குதலால் முழு நாடும் வேதனைக்கும் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளது” என்றும் NCW தெரிவித்துள்ளது.