தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்க பி. வாசு படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, வடிவேலு, மாளவிகா, நாசர் மற்றும் பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பி. வாசு இயக்கி வருகிறார்.

இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி மறுப்பு தெரிவித்து விட்டதால் ராகவா லாரன்ஸ் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். அதன்பிறகு லட்சுமிமேனன், சிருஷ்டி, ராதிகா சரத்குமார், வடிவேலு மற்றும் மனோபாலா போன்ற பல பிரபலங்கள் படத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வேட்டையன் மற்றும் சந்திரமுகி கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் ராகவா வேட்டையனாகவும், கங்கனா சந்திரமுகி ஆகவும் இருக்கிறார். மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.