கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, மோசடி செய்யும் நபர்கள் புதுப்புது முறைகளை கையாண்டு இன்டர்நேஷனல் கொரியர் மூலமாக பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்கின்றனர். அவர்கள் மும்பை கிரைம் பிரான்ச் போலீஸ் என கூறி செல்போன் மூலம் தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். இதனையடுத்து அவர்கள் தொழிலதிபர்களிடம் நீங்கள் வெளிநாட்டில் இருந்து போதை பொருட்கள் இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வந்தது.

எனவே வழக்குபதிவு செய்யாமல் இருக்க குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலமாக தாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடுங்கள் என கூறுகின்றனர். சிறிது நேரத்தில் மற்றொரு நபரும் செல்போன் மூலம் தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். இதனால் அச்சத்தில் தொழிலதிபர்கள் மோசடி நபர்களை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுவரை ஐந்து பேர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாக 1000-கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.