
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்காக வெளியிடப்பட்ட புதிய இலட்சினையில், தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக, தமிழ் எழுத்தில் “ரூ” என்ற குறியீடு இடம் பெற்றுள்ளது. இந்த மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டதுடன், புதிய பட்ஜெட் இலட்சினையையும் அறிமுகப்படுத்தினார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்வி நிதி உள்ளிட்ட சர்ச்சைகளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த இலட்சினை மாற்றம் தொடர்பாக பா.ஜ.க. கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை தி.மு.க. அரசு மாற்றியுள்ளதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா?” என கேள்வி எழுப்பி எக்ஸ் வலைதளத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார். மேலும், “தி.மு.க. எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுகிறது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுகிறது” என அவர் விமர்சித்துள்ளார்.