தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று கோவையில் மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜி அறிவுறுத்தியதோடு அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு ரத்ததான முகாம்கள் நடத்தப்படும். வருகிற மார்ச் 5-ம் தேதி கொடிசியா மைதானத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

அன்றைய தினம் வஉசி மைதானத்தில் நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வதோடு அன்று மாலை நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தையும் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக் கூட்டத்தில் கோவை மாவட்ட மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேருரை ஆற்றுவார் என்று கூறினார்.