வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க கோரி முதல்வர் சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்..

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை  சற்றுமுன் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன், சோனியா காந்தியையும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துபேசினார்.

இதையடுத்து ராகுல், சோனியாவை சந்தித்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி அவர்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த தமிழ்நாட்டில் நடத்த  வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த விழாவிற்கு அழைப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டிருந்தேன். நேரம் கொடுத்திருந்தார். அவரிடம் அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். கண்டிப்பா கலந்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதேபோல சென்னை வெள்ளம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு இருக்கிறது.

எனவே அதற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என ஏற்கனவே நீங்க திருச்சிக்கு வரும்போதே முதலமைச்சர் உங்ககிட்ட வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதனை சீக்கிரம் நிறைவேற்றிக் கொடுங்கன்னு முதலமைச்சர் நியாபகப்படுத்த சொன்னாருன்னு சொன்னேன். கண்டிப்பாக பண்ணி தரேன்னு சொல்லிருக்காரு. அதன் பிறகு மரியாதை நிமித்தமாக சகோதரர் ராகுல் காந்தியை பார்த்து நலம் விசாரித்தேன்” என்றார்.

ராகுல் காந்தியை பார்க்கும்போது அரசியல் குறித்து ஏதேனும் பேசினீர்களா? நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது என  செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.. அது பற்றி பேசினார். அதை இப்போது நான் சொல்ல முடியாது. அவருடைய பாதயாத்திரை மணிப்பூரில் தொடங்கப் போறதாக சொன்னார். மற்றபடி இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். பிரதமர் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவிற்கு வரேன்னு சொல்லிருக்காரு.. ராகுல் காந்தி வரவில்லை. அவர்பாதயாத்திரை போறாரு என தெரிவித்தார்..