தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் முழுமையாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் திமுக சொன்ன வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து குற்ற சாட்டி வருகிறார். இதேபோன்று பாஜக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை திமுக நிறைவேற்றவில்லை என்று கூறுகிறது. குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று திமுக கூறிவிட்டு தற்போது மத்திய அரசுக்கு தான் அந்த அதிகாரம் இருப்பதாக கூறுவது பெற்றோர்களையும் மாணவர்களையும் தமிழக மக்களையும் ஏமாற்றும் செயல் என்று விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதன்பிறகு மகளிர் உரிமைத்தொகை என்பது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படவில்லை எனவும் அதிமுகவின் தொடர் வலியுறுத்தலால்தான் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் திமுக வழங்கி வருகிறது எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இப்படி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி சொன்ன ஒரு வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அந்த வீடியோவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் 80 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார். அதன்பிறகு 2023 ஆம் ஆண்டு 100% வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதனையடுத்து 2025 ஆம் ஆண்டு 505 வாக்குறுதிகளில் மொத்தம் 385 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறுகிறார். 505 வாக்குறுதிகளில் 385 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் மொத்தம் 77 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதல்வரே இது என்ன தப்பு தப்பா இப்படி கணக்கு போடுறீங்களே என்ற விதத்தில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரல் ஆக்குகிறார்கள்.