உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளுக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீபாவளியை கொண்டாட வேண்டியுள்ளது. அதன்படி பல நாடுகளில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டிலுள்ள உட்டா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பொது விடுமுறையும் பட்டாசு வெடிக்க அனுமதியும் வழங்கும் மசோதா மாகாண சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு மாகாண சட்ட சபையில் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக ஆதரவளித்து வாக்களித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. அது மட்டும் இல்லாமல் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை வருவதால் அதனை ஒட்டிய ஐந்து நாட்கள் மட்டுமே பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாகாண பொது விடுமுறை பட்டியலுக்கு தீபாவளி பண்டிகை விரைவில் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.