
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசியலில் இரண்டாம் இடத்திற்கு தான் தற்போது கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக முதல் இடத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் கார் மாறி மாறி போனதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறினார்கள். அந்த அளவுக்கு அதிமுக அஞ்சி நடங்கும் எதிர்க்கட்சியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடிலும் சிறுபான்மையினர் மக்களின் நலனுக்காக எப்போதுமே பாடுபட்டு வருகிறது. திமுகவையும் இஸ்லாமியர்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் முதலில் திமுக தான் குரல் கொடுக்கிறது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.
முன்னதாக சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ரேசில் 22 சதவீத ஆதரவை பெற்று முதல்வர் ஸ்டாலின் முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு இரண்டாம் இடத்தில் 18 சதவீத ஆதரவுடன் விஜய் இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி 10% ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் அண்ணாமலை 9 சதவீத ஆதரவுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே மட்டும்தான் போட்டி என்று கூறினார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி என்று கூறுகிறார். பாஜக கட்சியோ எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு எதிரி திமுக தான் என்கிறது. மேலும் இதனை மனதில் வைத்து தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி அதிகமாக நிலவுகிறது என்று கூறியுள்ளார்.