
தமிழ்நாடு மருத்துவத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் பலரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய திட்டம் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம். 2009 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் புதிய காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அப்போது ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு தவணைத் தொகையாக வருடத்திற்கு 517 கோடி தமிழக அரசே தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு வழங்கியது.
பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தவணைத் தொகையை பங்கிட்டு கொண்டன. இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற அரசு வழிவகை செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள சிறப்பு அட்டையை காண்பித்தால் மட்டுமே போதும். இந்த சிறப்பு அட்டை வழங்கும் வரை குடும்ப தலைவராயின் நலவாரிய உறுப்பினர் அட்டையை சமர்ப்பிக்கலாம். குடும்பத் தலைவரை தவிர்த்த மற்ற உறுப்பினர்களாக இருந்தால் நலவாரிய உறுப்பினர் அட்டையுடன் கிராம, மற்றும் பஞ்சாயத்துகளாயின் கிராம நிர்வாக அதிகாரி,மற்றும் மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வரி வசூலிப்பாளரிடமிருந்து பெறப்படும் புகைப்பட அடையாள சான்றிதழ் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏனைய அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகலாகிய அவற்றை சமர்ப்பிக்கலாம்.
இந்த திட்டம் பற்றிய விபரங்களை அறிவதற்கு குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 18004253993 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.