கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார். இதில் அவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முத்துசாமி உயிரிழந்தார். வயது முதிர்வு காரணமாக கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுடன் அவரது மகன் விஸ்வநாதன் பராமரிப்பில் தோட்டத்தில் வீட்டில் வசித்து இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கன்னியம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கன்னியம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகாயி என்பவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது முருகாயி மூதாட்டியிடம் சுப நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என கூறி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை வாங்கினார்.

இதனையடுத்து முருகாயி அந்த சங்கிலியை அடமானம் வைத்தார். இதுகுறித்து கன்னியம்மாள் பலமுறை கேட்டும் பண வசதி இல்லாததால் முருகாயி தங்க சங்கிலியை மீட்டு கொடுக்கவில்லை. தொடர்ந்து கன்னியம்மாள் தங்க சங்கிலி குறித்து கேட்டதால் கோபத்தில் முருகாயி கன்னியம்மாளின் கழுத்தை அறுத்தும், கல்லால் முகத்தில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.