ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 50 வயதான யூரி என்ற நபரின் கண்ணுக்குள் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள மரக்கட்டை புகுந்து, அது நீண்ட நாட்களாக அவருக்குத் தெரியாமல் இருந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது வீட்டுத் தோட்டத்தில் அவர் மரம் வெட்டிக்கொண்டிருந்தபோது கண்ணில் பலத்த வலி ஏற்பட்டுள்ளது. ஏதோ சிறிய மரத்தூள் தான் விழுந்திருக்கும் என்று நினைத்து அவர் அதை அலட்சியப்படுத்தியுள்ளார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கண்ணில் வலி அதிகமாகி, ஒரு கட்டத்தில் அவரது கண் பார்வையும் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான், அந்த மரக்கட்டை கண்ணின் வழியாக மண்டையோட்டின் பகுதி வரை சென்று, மூளைக்கு மிக அருகில் ஆபத்தான நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். முகத்தில் எந்தவொரு வெட்டுக் காயமும் ஏற்படுத்தாமல், மூக்கின் வழியாக அந்த 12 சென்டிமீட்டர் நீள மரக்கட்டையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்து யூரியின் கண் பார்வையையும் காப்பாற்றியுள்ளனர்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் இதனை ஒரு ‘மருத்துவ அதிசயம்’ என்று ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர். மேலும், சிறிய காயமாக இருந்தாலும் அதனை எப்போதும் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து விவாதித்து வருகின்றனர்.
