பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கோத்கி நகரைச் சேர்ந்த சுமீரா ராஜ்புத் (வயது 32), டிக்டாக்கில் தனது வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். அவரைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 58,000-ஐ கடந்துள்ளது. சமூக ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருந்த நிலையில், கடந்த வாரம் திடீரென அவர் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுமீராவின் மரணம் குறித்து அவரது 15 வயது மகள் அளித்த தகவலின்படி, சில நபர்கள் அவரது தாயை கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார். இந்த அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, சுமீராவுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த போலீசார் சுமீராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடக்க அறிக்கையில், அவருக்கு எந்தவிதமான உடல் துன்புறுத்தலின் தடயங்களும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்வர் ஷேக் தெரிவித்தார்.

இது மட்டுமன்றி, கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் 17 வயது டிக்டாக் பிரபலம் சனா யூசுப் வீட்டில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. அவருக்கு 7.4 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். குற்றவாளி 20 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள பெண்களுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து வன்முறைகள் நிகழ்வது, அந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.