உலகப் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹88.66 லட்சம் கோடி) சம்பளம் வேண்டும் என்று டெஸ்லா பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால் நிறுவனத்தை விட்டு விலகுவதாகவும் அவர் கூறியதால், டெக்சாசில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் நடந்த வருடாந்திரக் கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் பேசிய டெஸ்லா தலைவர் ராபின் டென்ஹோம், மஸ்க் வெளியேறினால் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சியடையும் என்பதால், அவரது சம்பள விவகாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
கூட்டத்தின் முடிவில், அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, மொத்தம் உள்ள பங்குதாரர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் எலான் மஸ்க்கிற்கு அவர் கேட்ட ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க ஒப்புதல் அளித்தனர். டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், இதனை 8.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தச் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளில் நிலவும் கடும் போட்டியைக் கருத்தில் கொண்டே இந்தச் சம்பள உயர்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த முடிவின் மூலம், எலான் மஸ்க் தொடர்ந்து 7 ஆண்டுகள் டெஸ்லா நிறுவனத்தில் சேவையைத் தொடர்வது உறுதியாகி உள்ளது.
