தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் சேர்மன் (வயது 54) அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், பக்கத்து ஊரிலிருந்து வந்த 10 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க அந்த கடைக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாத தனிமையை பயன்படுத்திய சேர்மன், அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுமி கதறி அழுததை தொடர்ந்து, யாரிடமும் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

வீட்டுக்குத் திரும்பிய சிறுமி மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால், அதனை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது அவர் நடந்ததை கூறி வலியுடன் அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களது புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீசார், சம்பவத்தின் தீவிரத்தையும் சிறுமியின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அவசர நடவடிக்கை எடுத்தனர்.

அதன்பேரில், சேர்மனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.