
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 2022 தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாகலாந்து, மிசோரம் சார்ந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற மனநிலையை கொண்டிருந்தனர். அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு வரை இந்திய மக்களும், நாகலாந்து மக்களும் ஒன்றாக தான் இருந்தனர். அரசியல் ரீதியாக மாற்றங்கள் இருந்தது. மேலும் வேறுபாடு காரணமாக அந்த மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் கூட இந்தியாவுடன் இணைந்து செயல்படவில்லை.
இரண்டு எல்லைகளையும் கடந்து செல்ல அனுமதி சீட்டு முறையை ஏற்படுத்திய பின் தான் பிரிவு அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தை கூட வேறு நாட்டில் தான் நடைபெற்று வந்தது. இந்த பிரச்சனையை மத்திய அரசு பேச ஆரம்பித்த போது இந்தியாவின் தில்லியில் தான் பேச்சுவார்த்தை நடைபெறும் அதற்கு ஒப்புக்கொண்டால் மேற்கொண்டு பேசலாம் என கூறினோம். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பின் இந்த ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்தியா ஆன்மீக சிறந்த கலாச்சாரம் கொண்ட நாடு என்ற காரணத்தினால் அதனை பாரதம் என கூறுகிறோம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மத போதகர்கள் வடக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக மலைவாழ் மக்களிடம் மதத்தை திணிக்க முயற்சி செய்தனர்.
பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் மாறாத கலாச்சாரம் மற்றும் சிறந்த மொழி வளம் பண்பாடு போன்றவற்றை கொண்டது தமிழ்நாடு. எங்கு சென்றாலும் தமிழர்கள் தமிழ்நாடு என்ற பெயரையும், கலாச்சாரத்தையும் பெருமையாக உணர்கின்றனர். மேலும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலை மிகவும் அழகானது. அதிலும் ராமேஸ்வரம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கலைகள் சிறப்பானவை. இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர்கள் 44 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் காசி தமிழ் சங்கம் என்ற நூலை பரிசாக அளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மை செயலர் ஆனந்தராவ் பாட்டில் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.