
தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதோடு சீரான இடைவேளையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் விஜய் நடத்தி வருகிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி வரும் என்று கூறி வருகிறார். அவருடைய கட்சியில் சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா இணைந்த நிலையில் அவருடைய ஏற்பாட்டின் படி தற்போது பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னையில் விஜயை சந்தித்தார். இன்று இரண்டாவது நாளாக அவர்களுடைய சந்திப்பு நடந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் ஆலோசகராக தற்காலிகமாக பிரசாத் கிஷோர் செயல்பட இருக்கிறார். முன்னதாக குஜராத்தில் பிரதமர் மோடியை தேசிய அளவில் பிரபலமாக்கி பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தார். தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுக்கிறார். குறிப்பாக வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற நோக்கத்தில் பிரஷாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளாராம். தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் அவர்களுடைய ஓட்டுகளை மொத்தமாக பெற விஜய் திட்டமிட்டுள்ளாராம். மேலும் எப்படி செயல்பட்டால் வெற்றி கிட்டும் போன்ற ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ளதாகவும் இனி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிக்கான அனைத்து வழிகளையும் தமிழக வெற்றிக்கழகம் மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.