
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையில் கையெழுத்திட்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால் மாற்றுத்திறனாளிகள் குறித்து போட்ட ஒரு பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் பணிகளில் மாற்றித் திறனாளிகளுக்கு எதற்காக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விமானப்படை மற்றும் இராணுவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இதேபோன்று தான் ஐஏஎஸ் பணியையும் கருத வேண்டும். ஏனெனில் இந்த பணிகளில் மக்களின் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு நீண்டகால பணி என்பதால் உடலானது அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அவர் உடனடியாக தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.