மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வாழை’ திரைப்படத்தில், ‘சிவனைந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய மாணவர் பொன்வேல், தற்போது தனது நிஜ வாழ்க்கையிலும் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தேர்வில் பொன்வேல் 600-க்கு 506 மதிப்பெண்கள் பெற்று மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குறிப்பாகத் தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 93 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளார்.

திரையில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் மனங்களையும் வென்ற அந்தச் சிறுவன், படிப்பிலும் கெட்டிக்காரனாகத் திகழ்வதைப் பார்த்து ‘வாழை’ படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். நிஜத்திலும் ஒரு வெற்றியாளனாகத் தன்னை நிரூபித்துள்ள பொன்வேலுக்கு வாழ்த்துகள் மழையெனப் பொழிந்து வருகிறது.