திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் வீரம்மாள் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த நாளில் வீரம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதன் பிறகு பிரவீன் குமார் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பிரவீன் குமார் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது பிரவீன் குமாருக்கும் அவருடைய ‌ மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவ நாளிலும் அதேபோன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தில் தன்னுடைய மனைவியை அவர் அடித்த நிலையில் காலால் கழுத்தில் மிதித்துள்ளார். இதில் வீரம்மாள் இறந்துவிட்டார் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் பிரவீன் குமாரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.