ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் – கனிமொழி தம்பதி. இந்த தம்பதியின் 27 வயது மகன் கார்த்தி அசாம் மாநிலத்தில் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். ஈஸ்வரன் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் பெட்ரோல் பங்குக்கு சென்று விட்டு நள்ளிரவு 2:30 மணி அளவில் வீடு திரும்பிய ஈஸ்வரன் மனைவியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் தூங்க சென்றனர்.

இந்நிலையில் மகன் கார்த்தி பெற்றோரிடம் பேசுவதற்காக நேற்று காலை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் இருவரும் மொபைலை எடுக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மூலமாக பேச நினைத்து வீட்டிற்கு சென்று பார்க்கச் சொன்னார்.

ஆனால் வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது படுக்கை அறையில் இரத்த வெள்ளத்தில் கனிமொழி இறந்து கிடந்தார்.

அதேபோன்று சமையலறையில் கழுத்தை அறுத்த நிலையில் ஈஸ்வரன் தூக்கில் தொங்கி சடலமாக கிடந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கனிமொழியை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு ஈஸ்வரன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதும் ஆனாலும் உயிர் போகாததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

ஈஸ்வரனின் இத்தகைய முடிவிற்கு காரணம் கடன் பிரச்சனையா? குடும்பத்தகரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.